Monday, August 11, 2014

ஒலகத் தரப் படமும் உள்ளூர் மாக்கானும்


ரைட். இந்தப் படம் ரிலீஸான போது பார்க்கத் தோதுப்படவில்லை.அதற்கப்புறமும் அமையவில்லை.

இன்று தான் டி வியில் போட்டார்கள். சரி ஊரே கொண்டாடிச்சே அப்படி இதில் என்ன தான் இருக்கு என்று பார்த்தேன்.

படம் பார்க்கும் போது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. இந்தப் படம் வெளி வந்த போது விகடனில் விமர்சனம் செய்திருந்தார்கள். 52 மார்க் கொடுத்திருந்ததாக ஞாபகம்.

அதற்கு அடுத்த வாரம் படத்தின் டைரக்டர் விகடன் விமர்சனத்தின் மீதான தன் விமர்சனங்கள் என்று ரெண்டு பக்கம் விகடனிலேயே எழுதி இருந்தார். அதில் அவர் சொன்ன முக்கியமான பாயின்ட். தற்கால கல்வி முறை எப்படி எல்லாம் குழந்தைகளை பாதிக்கிறது, அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட ஒன்றும் மோசமில்லை போன்ற கருத்துகளை நான் என் படத்தில் சொல்லி இருக்கிறேன். அது ஏன் விகடன் கண்ணில் படவில்லை என்று கேட்டிருந்தார்.

படம் முழுக்கப் பார்த்ததில், எனக்குத் தெரிந்து டைரக்டர் தான் சொன்னதாக சொன்ன கருத்து எனக்குத் தெரிந்தது, கடைசி சீனில் மட்டும் தான். அது கூட அவர் சொல்வது, பிரைவேட் ஸ்கூலிலிருந்த நல்ல டீச்சர் கவர்மெண்ட் ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்து விட்டதால் தன் பிள்ளையை அங்கு சேர்க்கிறேன் என்று.

மற்றபடி, உலக சினிமா ஆர்வலர்களும், மாற்று சினிமா ஆதரவாளர்களும் எகிறிக் குதித்து வந்து மூக்கிலேயே குத்தினாலும் சரி - என்னைப் பொறுத்த வரையில் இந்தப் படம் முழுக்க முழுக்க தப்பான விஷயங்களை ஓவர் உணர்ச்சிக் குவியலாக Glorify பண்ண மட்டுமே செய்கிறது. இதற்கு முன்னால் இந்த மாதிரி ஊரே கொண்டாடிய , ஆனால் மிகத் தப்பான ஒரு விஷயத்தை சென்டிமென்ட் போர்வைக்குள் புகுந்து கொண்டு சீராட்டிய படம் " காதல்".

அதற்கப்புறம் நான் பார்த்து இது தான்.

உடனே கொலை கொள்ளை எல்லாம் Glorify பண்ணிப் படங்கள் எடுக்கவில்லையா? என்னவோ இதற்கு மட்டும் எகிறுகிறாயே என்று சிலர் கேட்கலாம்.

அய்யா.. எதை வேண்டுமானாலும் தப்பாகக் கூட Glorify பண்ணிப் படம் எடுங்கள். ஆனால் குழந்தைகளின் உலகத்தைக் காட்டுகிறேன் பேர்வழி என்று இந்த மாதிரி தப்பான உதாரணங்களைக் காட்டுவது ரொம்ப ஆபத்தானது.

குழந்தை ஆசைப்பட்டுப் பல விஷயங்கள் கேட்கும். அதில் எது முடியும் முடியாது, எது சரி தப்பு என்று கூட சொல்லிப் புரிய வைக்காமல் பைத்தியம் போல் அலையும் பாசம் பாசமே அல்ல. குருட்டு அன்பு. படத்தைப் பார்க்கும் போது அந்த ஹீரோவையும் அந்தக் குழந்தையையும் தவிர சுற்றி இருக்கும் எல்லா கேரக்டர்களுமே யதார்த்தமாக இருப்பது போல் தோன்றியது எனக்கு.

குழந்தை மந்தமாக இருப்பது தப்பில்லை. ஆனால் படத்தில் அது பேசும் வசனங்களையும் கேட்கும் கேள்விகளையும் பார்க்கும் போது ஒன்றே ஒன்று தான் தோன்றியது. படத்தில் ஒரு கட்டத்தில் படத்தில் குழந்தையின் அம்மா கோவத்தில் சொல்வாள் - " லூஸாட்டம் பேசாதே" என்று. அதேதான்.

படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் அம்மாவும் ஒரு கட்டத்தில் கமெண்டடித்தாள். " நல்ல அப்பா நல்ல பொண்ணு. பொண்ணை வளர்க்கத் தெரியாம வளர்த்துட்டு செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிட்டு இவன் பாட்டுக்கு எங்கேயோ கிளம்பிப் போயிட்டான் கோச்சிண்டு. இப்போ பாரு அம்மா தானே கஷ்டப் படறா அந்த பொன்ணை வெச்சிண்டு?"

பிள்ளைகளைப் பெற்ற அம்மாக்களுக்குத் தான் தெரியும் சினிமாவில் காண்பிக்கிறாற் போலெல்லாம் பிள்ளைகளை வளர்த்தால் அவ்வளவு தானென்று.

இது தான் உலகத் தரப் படமா?

சொல்வீர்களா? நீங்கள் சொல்வீர்களா?

No comments:

Post a Comment