Saturday, June 21, 2014

ஒற்றை

ஏ சி யை அணைத்து விட்டார்கள். இருந்தாலும் நாள் பூரா ஓடியதன் குளுமை மிச்சமிருந்தது. எலக்ட்ரீஷியன் வந்து ப்ளோரை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு, நான் உட்கார்ந்திருப்பதை பார்த்து விட்டு , என் தலைக்கு மேலே இருந்ததைத் தவிர மற்ற எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டுப் போய் விட்டார். லேப்டாப்பிலிருந்து வரும் மிக மிக லேசான உறுமல் கூட பேரொலியாய்க் கேட்டது.அதன் கடிகாரம் ஒன்பது காட்டியது.

மாதக் கடைசி என்றால் கொஞ்சம் பேரிருப்பார்கள் பத்துப் பத்தரை வரை.அப்படியே நானும் நேரத்தை ஓட்டி விடுவேன். இப்போது அதுவுமில்லாததால் ஒருவரும் இல்லை.நான் மட்டும் தான். இன்னும் ஒரு பத்து நிமிஷங்கள் என் டி டி வி, டைம்ஸ் நௌ, தினமணி என்று நெட்டில் மேய்ந்தேன். அதற்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை.இருந்து தான் என்ன செய்வது? ஷட் டவுன் செய்து விட்டுக் கிளம்பினேன்.



மிக நிதானமான பைக் ஓட்டம். வீட்டை நெருங்குகையில் வழியில் எதிரே சீனு வந்து கொண்டிருந்தார். முன்பு குடியிருந்த பிளாட்டின் சொந்தக்காரர். அவசரமாக இடப் புறம் திரும்பி பக்கத்து சாலையில் புகுந்து விட்டேன். ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. ஆனால் வண்டியை நிறுத்தி நலம் விசாரித்தால் நிச்சயம் நான் எதிர் கொள்ளவே கூடாது என்று நினைக்கிற கேள்விகள் கேட்பார். அவற்றுக்கு சிரித்த முகத்தோடு பதில் சொல்லும் நிலமையில் நானில்லை.

அடுத்து இரண்டு தெருக்கள் கடந்து அந்த அண்ணன் கடையில் நின்றேன்.கடைக்குப் பெயரெல்லாம் கிடையாது. அண்ணன் கடை தான். என்னைப் பார்த்ததும் அவர் கல்லில் தோசை போட ஆரம்பித்தார். அவருக்குத் தெரியும். என் மெனு ஒற்றைத் தோசை தானென்று.வாங்கிக் கொண்டு வீடு சேர்ந்தேன்.வண்டியைப் பார்க்கிங்கில் விட்டுப் படியேறி வாசல் விளக்கைப் போட்டேன்.

பூட்டைத் திறந்ததும் அவ்வளவு நேரம் எங்கு தான் ஒளிந்திருந்ததோ.  திபு திபு வென்று தனிமையின் அழுத்தம் வந்து உடலெங்கும் அப்பிக் கொண்டது.அவ்வளவு நேரம் ஏற்படாத அயர்வு சட்டென்று ஏற்பட்டது போல் இருந்தது. இன்னும் இந்த வீட்டில் காலை வரை இருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே அலுப்பாக இருந்தது.எப்போதும் வரும், எனக்குப் பிடிக்காத ஆனால் பழகி விட்ட லேசான முடை வாசனை மெல்ல வரவேற்றது.

அதென்னவோ. வீட்டில் ஆள் இருக்கும் போது , சின்ன சின்ன விஷயங்கள் கூட தானாய் ஒழுங்காக நடப்பது போன்ற ஒரு பிரமை. அப்பா அம்மாவுடன் இருந்த போதும் சரி, அவள் கூட இங்கே இருந்த போதும் சரி. ஆபீசில் இருந்து வந்து உள் நுழைந்ததும் முதலில் வாசல் கதவை சாத்துவது, அப்புறம் ஷூ கழற்றுவது, பையை அதனிடத்தில் கொண்டு வைப்பது, ஏசியை ஆன் பண்ணுவது என்று வரிசைக் கிரமமாக செய்வேன். செய்வேன் என்பதை விடத் தானாக நடக்கும்.

தனியாக இருக்கத் தொடங்கியதும் இந்த மாதிரி சின்ன விஷயங்களில் நிறைய தடுமாற்றம். வரிசைக்கிரமமான நடவடிக்கைகளில் ஏதாவது ஒன்று விடுபட்டு விடும். ஒரு சில நாட்கள் ஷூவை கழற்றாமலேயே மறந்து வீட்டுக்குள் வந்து இருக்கிறேன். வீட்டில் ஆளிருப்பதற்கும் இவைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று திட்டமாய்ச் சொல்ல முடியவில்லை.பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகளெல்லாம் ஸ்திரமான ஆண்களுக்கு ஏற்படுமா என்ன? அப்படி ஏற்பட்டால் இவை எல்லாம் நடக்குமா என்ன? ஒன்றும் புரியவில்லை.   அப்புறம் இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் சரிப் படுத்திக் கொண்டிருக்கிறேன்.அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறேன்.



இன்றைக்கு மேலே வந்து ஷூ கழற்றும் போது தான் ஞாபகம் வந்தது. வண்டியைப் பூட்டாமல் வந்திருக்கிறேன்.கீழே இறங்கிப் போய்ப் பூடி சாவியை எடுத்துக் கொண்டு வந்தேன்.கிச்சனுக்குள் போய்த் தண்ணீர் குடித்தேன். அடுப்படியை இப்போதெல்லாம் உபயோகிப்பது அதற்கு மட்டும் தான். கேஸ் ஸ்டவ் பிசுக்கு பிடித்துப் போயிருந்தது. காபி டீ குடிப்பதில்லை. அதிலும் என்னவோ சலிப்பு.

உடை மாற்றிக் கொண்டு வந்து சோபாவில் சாய்ந்தேன். டி வி. என்னவோ தத்துபித்தென்று காமெடி. எல்லாக் காதல் பாடல்களும் அர்த்தமில்லாதவைகளாகத் தோன்றி எரிச்சல் மூட்டின. வேறு வழியே இல்லாமல் நியூஸ் சேனல். ஆபீஸில் மேய்ந்த அதே செய்தி. அடுத்த புதுப் பரபரப்பு ஏதும் நடந்திருக்கவில்லை.எங்கேயோ இலக்கின்றி வெறித்துக் கொண்டு இருந்தேன். கைகள் மட்டும் ரிமோட்டை நோண்டிக் கொண்டிருந்தன.

சுயநினைவுக்கு வந்து மெல்ல எழுந்து போய் பிரிட்ஜைத் திறந்து அதை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தேன். தினமும் கொஞ்சமேனும் ஈடுபாட்டுடன் செய்வது இந்த ஒரு வேலை மட்டும் தான். நிச்சயம் இது துக்கத்தை மறப்பதற்கு அல்ல என்பது எனக்குத் தெரியும்.

ஆறு மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். பிடிப்பு பாசம் என்றெல்லாம் சொல்லப்படும் விஷயங்கள் அப்போது தான் வளாரத் தொடங்கியிருந்த நேரம் என்பதால் பிரிவு நிச்சயம் அந்த வகையில் வேதனை தரவில்லை. திருமணமான புதிதில் திகட்டத் திகட்ட பழகியிருந்த விஷயம் தான் இரவில் தூங்க விடாமல் படுத்தும். அதை மறந்து கொஞ்ச நேரமாவது தூங்கவே இது. மனதும் மூளையும் நாம் சொல்லும் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவள் இல்லை என்றால் இல்லை என்று அமைதியாயிருக்கின்றன. இந்த உடம்புக்கு எப்படிப் புரிய வைப்பது.

அவள் போன பிறகான இந்த ஆறு மாதங்கள் அவளைப் பற்றி நினைத்து வருந்தியதை விட சுற்றி இருப்பவர்கள் கேட்கும் கேள்விகளும் அள்ளி வீசும் அனுதாபங்களும் தான் சலிப்பையும் எரிச்சலையும் உண்டு பண்ணுவதாக இருந்தன.அம்மா அப்பாவுடன் போய் இருந்து விடலாமா என்று தோன்றிய சின்ன நப்பாசையை அடியோடு னசுக்கி  விட்டேன். கழிவிரக்கத்தின் வாய்க்காலே அங்கு தான்.

தனிமை சில சமயங்களில் அதீதமாய்ச் சுட்டாலும் கடக்கக் கூடியதாய் அதை மாற்றும் முயற்சிகளில் ஓரளவு வெற்றி பெற்றுக் கொண்டிருந்தேன். அவ்வப்போது அவளை மூடியிருந்த துணி விலக்கப் பட்ட போது தெரிந்த சிதைந்த முகம் நினைவில் வந்து துணுக்குறச் செய்தாலும் அதையும் விழுங்கிக் கொள்ளப் பழகியிருந்தேன்.இது மட்டும் தான் ஒரே உறுத்தல். ஆனால் உடலை நிலையில் வைக்கத் தூங்கினால் தான் ஆகும். அதற்கு இது அவசியம்.

சில சமயம் எதற்காக இப்படி எல்லாம் அக்கறை கொண்டு செய்ய வேண்டும் எதை நோக்கிப் போகிறேன் என்று கேள்வி எழும். காரணமில்லாமல் சிரிப்பும் வரும்.

சரியாய் மூன்று ரவுண்டுகள். முடித்த பின் தோசையைப் பிரித்தேன். ஆறிக் காய்ந்து போயிருந்தது. உடைத்துத் தின்று விட்டு, படுக்கையில் போய் விழுந்தேன். டிவியை அணைத்தேனோ? ஞாபகம் இல்லை. ஓடினால் தான் என்ன?

மறுநாள். அதே கிளம்பல். அதே சாலை, அதே ஆபீஸ். அதே வேலை. அன்று என்னவோ மனம் செல்லவே இல்லை. உட்காரவும் பொறுக்கவில்லை.அதைக் கொஞ்சம் குடித்தால் தேவலாம் போலிருந்தது. வெளியில் எங்கேயும் போக விருப்பமில்லை. வீட்டுக்கே போக எண்ணிக் கிளம்பி விட்டேன். நல்ல வெளிச்சம் மிச்சமிருந்தது.

வீடு வந்து சேர்ந்தேன்.உடை மாற்றி அதை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தேன். வாயில் வைக்கும் முன் தட்டென்று ஒரு சத்தம். பால்கனிப் பக்கமிருந்து கேட்டது.
எழுந்து போய்ப் பார்த்தேன். ஏப்ரல் மாதமாயிற்றே. பள்ளிகளுக்கு லீவு விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. பின் பக்கமிருந்த சிறு மைதானத்தில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆட்டம்.வெளியே வந்ததும் கீழேயிருந்து குரல்." அங்கிள்... பால் பால்கனில விழுந்துடுச்சு. ப்ளீஸ் எடுத்து போடுங்க அங்கிள்" என்று. அபார்ட்மென்ட் செகரேட்டரி சிவனேசன் மகன் அபினேஷ். இந்தப் பேருக்கு என்ன அர்த்தம்?

"பால் குடுக்கணும்னா ஒரு கண்டிஷன். என்னையும் வெளாட்டுக்கு சேர்த்துகிட்டா தான் குடுப்பேன். ஓகேவா?" என்றேன் சிரித்துக் கொண்டே.

அவர்களுக்குள் குசு குசுவென்று பேசிக் கொண்டவர்கள், " பால் எடுத்துட்டு வாங்க அங்கிள் விளையாடலாம்" என்றார்கள். அவ்வளவு பெரிய உருவமாக அச்சுறுத்தும் படி இல்லாததாலும் பந்தைக் கண்ணாடி மேல் அடித்ததற்கு எதுவும் சொல்லாததாலும் என்னை சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருப்பார்கள் போல.

" இரு வரேன்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்து கையில் கிடைத்த ஏதோ ஒரு டீ ஷர்ட்டை எடுத்துப் போட்டுக் கொண்டு அவசரமாகக் கதவை சாத்தி விட்டுப் படியிறங்கினேன். ரொம்ப நாளாக காணாமல் போயிருந்த சுறுசுறுப்பு கொஞ்சமாக வந்தாற் போலிருந்தது.

அடுத்த ஒரு மணி நேரம் இருட்டும் வரை வியர்க்க வியர்க்க விளையாட்டு. முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் பிறகு சமாளித்துக் கொண்டேன்.பிளாட்டிலிருந்து ஒரு சில பெண்கள் எட்டிப் பார்த்து ஏதோ கமென்ட் அடித்தது ஐந்து நிமிடங்கள் மட்டும் கூச்சமாக இருந்தது.

தொப்பலாய் நனைந்து வீட்டுக்குள் வந்து சோபாவில் விழுந்தேன். எடுத்து வைத்து விட்டுப் போயிருந்தது அப்படியே இருந்தது. இப்போது அதை அருந்தும் மனநிலை இல்லை. அதை அப்படியே எடுத்து பிரிட்ஜுக்குள் வைத்தேன். டி வியைத் திருப்பினால் ஏதோ ஒரு சேனலில் கிரிக்கெட் மாட்ச். பார்த்தே பல நாட்களாகிறது.மெல்ல அதில் ஆழ்ந்தேன். கொஞ்ச நேரம் கழித்துத் தான் பசி உறைத்தது.

ஓடியாடி விளையாடியதன் விளைவு. இன்று நிச்சயம் ஒரு தோசை போதாது. வீட்டைப் பூட்டிக் கொண்டு அண்ணன் கடைக்குப் போனேன்.என்னைக் கண்டதும் தோசை போட ஆரம்பித்தவர், நான் உள்ளே போய் உட்கார்ந்து " அண்ணே ரெண்டு பரோட்டா" என்று சொன்னதும் ஏற இறங்கப் பார்த்தார். புன்னகைத்தாரோ?

நன்றாக சாப்பிட்டு விட்டு வீடு சேர்ந்தேன்.புத்தக அடுக்கிலிருந்து ஏதோ ஒரு புத்தகத்தை உருவினேன்.நாஞ்சில் நாடன் கதைகள் என்றது அட்டை. ரொம்ப நாளாக எடுக்காததால் ஒரே தூசி. நன்றாகத் துடைத்தேன். போய் கட்டிலில் விழுந்து கொண்டு படிக்க ஆரம்பித்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

காலையில் எழுந்ததும் வலக்கையை தூக்க முடியவில்லை. ரொம்ப நாட்கள் கழித்து விளையாடியதன் விளைவு. உடலில் சோர்வு தெரிந்தது. ஆனால் உள்ளுக்குள் எங்கோ காணாமல் போயிருந்த உற்சாகம் மெல்ல மீண்டாற் போலிருந்தது.

புறப்பட்டு பைக் ஸ்டார்ட் பண்ணும் போது அபினேஷ் எதிரே வந்தான். கையில் பால் பாக்கெட்.புன்னகைத்து " குட் மார்னிங் அங்கிள்" என்றான்.

" என்ன அபினேஷ் இன்னிக்கும் விளையாடுவீங்களா?" இது நான்.

" ஆமா அங்கிள். நீங்க வரீங்களா இன்னிக்கும்" என்றான்.

" நிச்சயமா" என்று சொல்லி விட்டு பைக்கை உதைத்துக் கிளம்பினேன். காற்றில் சட்டைக் காலர் படபடத்தது.வேகம் கொஞ்சம் கூடியிருந்தது.

அது சரி ..வீட்டைப் பூட்டினேனா?

1 comment:

  1. அசத்தல்யா. எதுக்காச்சும் அனுப்பிருக்கலாமே இதை. நல்லா வந்துருக்கு. நிறைய விஷயத்தை சொல்லாமசொல்லிருக்க.

    ReplyDelete