Sunday, February 23, 2014

வீடு திரும்புதல்

வர வர காலையில் எழுந்ததும் இவள் முகத்தைப் பார்க்கவே பிடிக்க மாட்டேனென்கிறது. எப்போது பார்த்தாலும் தனக்குத் தானே செய்ய வேண்டிய வேலைகளை உரக்கச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பது, பிள்ளைகளை காலையில் விரட்டுகிறேன் பேர்வழி என்று பக்கத்து வீட்டுக்கு கேட்கிறாற் போல் கத்துவது, எப்போது பார்த்தாலும் அழுக்குப் புடவையும் வியர்வைக் கசகசப்புமாக வளைய வருவது என்று எதுவுமே பிடிக்கவில்லை.
 
தூங்கும் போது இன்னும் கொடூரம். மிக்ஸியில் கொப்பரைத் தேங்காயைப் போட்டு அரைப்பதைப் போல் அவள் விடும் குறட்டை பல நாட்கள் என் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது. குறட்டை விடுவதற்கெல்லாம் வெளி நாட்டில் டைவர்ஸ் பண்ணுகிறார்களாமே? கொடுத்து வைத்தவர்கள். எல்லாவற்றுக்கும் மேல் காலையில் காபியைக் கொண்டு வந்து கையில் கொடுக்கும் போது, வியர்வை, வெங்காயம், புளிக் கரைசல், அடுக்களை எனக் கலந்து கட்டி அவள் மேலிருந்து வரும் வாசனை...அப்பப்பா..
 
ஏன் இவள் இப்படி இருக்கிறாள்? என்ன பெரிதாக கேட்கிறேன்? கொஞ்சம் திருத்தமாகப் புடவை கட்டிக் கொள். அவ்வப்போது முகம் அலம்பிக் கொள். பேச்சின் வால்யூமைக் குறை..இவ்வளவு தானே? இதையெல்லாம் கூட ஒருத்தர் சொல்லித் தர வேண்டுமா என்ன? அதையும் மீறி எவ்வளவோ முறை நிதானமாக சொல்லிப் பார்த்தாயிற்று. சொல்லும் போதெல்லாம் மண்டையை ஆட்டுவதோடு சரி. செயலில் ஒன்றையும் காணோம்.
 
வெளியில் சேர்ந்து போனால் சிங்கத்தின் வாயில் அகப் பட்ட எலியைப் போல் என்னை போவோர் வருவோரெல்லாம் பரிதாபமாகப் பார்க்கிறான்கள்.எல்லா இடத்திலும் அவள் குரல் மேல்ஸ்தாயியில் தான் ஒலிக்கும். கீழே இறங்கினதாக சரித்திரம் இல்லை. நாகரிகமான ரெஸ்டாரென்டுகளுக்கு போவது கூட இதனால் நின்று விட்டது. எப்போது பார்த்தாலும் இட்லியும் தோசையும் தான். மிஞ்சிப் போனால் ஒரு உப்புமா.அதுவும் வியர்வை வாசனையுடன்.
 
முப்பத்தி மூன்று வயது வரை கல்யாணம் ஆகாமல் , நானும் வருத்தப் பட்டு, அப்பா அம்மாவையும் வருத்தப் பட வைத்துக் கொண்டிருந்த சமயம், குணசீலன் இந்த வரனைக் கொண்டு வந்தார். பெண்ணுக்கு ஏதோ ஜாதகக் கோளாறினால் முப்பது வயது ஆகியும் கல்யாணம் ஆகவில்லை என்றும் ஆனால் என் ஜாதகத்தோடு அருமையாகப் பொருந்திப் போகிறதென்றும் சொல்லி, அப்பா அம்மாவை மயக்கி, என் எதிர்பார்ப்பையும் கிளறி விட்டு, பெண்ணின் போட்டோவைக் காட்டாமலேயே பெண் பார்க்க அழைத்துப் போய் விட்டார்.
 
 போன பிறகு தான் விஷயம் தெரிந்தது. பெண் என்னை விட உயரம் அதிகம். உயரத்தை விட பருமன் அதிகம்.உட்காரப் பொறுக்கவில்லை.எப்படா கிளம்புவோம் என்றிருந்தது. அதிலும் இடியைப் போடுவது போல் பெண்ணின் அப்பா வந்து பெண்ணுக்கு என்னை ரொம்பப் பிடித்திருப்பதாகக் கூறினார். எப்படா வாய்ப்பு வரும் என்று காத்திருந்த அப்பாவும் அம்மாவும் உடனே சரி சரி என்று தலையாட்டி என் தலையில் மண்ணள்ளிப் போட்டனர்.   
 
அப்பா அம்மாவின் கெஞ்சலான பார்வையும்  என்னுடைய அதீதமாக்க் காய்ந்து போயிருந்த தன்மையும் அதற்கு மேல் என்னை எதுவும் பேச விடவில்லை. அப்படித் தான் இவள் என் மனைவி ஆனாள்.
 
என்னிடம் மிச்சமிருக்கும் பலப் பல பெருமூச்சுகளில் ஒன்றை வெளியேற்றி, பழைய நினைவுகளிலிருந்து மீண்டேன். அலுவலகம் கிளம்ப வேண்டும். நேரம் ஆகிறது. இந்தக் கை வலி வேறு பாடாய்ப் படுத்துகிறது.ஆபீஸிலிருந்து வரும் போது டாக்டரைப் பார்த்து விட்டு வர வேண்டும். வீட்டுக்கு லேட்டாக வர இன்னொரு காரணம்.
 
கிளம்பி தயாராகி வாசலுக்கு வர வர கை வலி அதிகமாகி முழங்கைக்குப் பரவி...கண்கள் இருட்ட,..
 
லேசான ஏ சி யின் உறுமல் காதுகளில் தீனமாகக் கேட்டது. கண்களைத் திறக்க முடியவில்லை. நினைவு சுழன்று சுழன்றூ வந்தது. சில நிமிடங்கள் கழிந்த்தும் நினைவு ஒரு நிலைக்கு வந்தது. கண்களை லேசாகத் திறக்க முடிந்தது. கட்டிலின் அருகில் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருந்த உருவத்தை சரியாக நினைவுபடுத்.... ஞாபகம் வந்து விட்டது. பக்கத்து வீட்டு பாஸ்கர்.சென்னைத் தமிழ் பேசும், தோட்ட வளர்ப்பில் ஆர்வம் கொண்ட சரித்திரப் பேராசிரியர்.
 
இவரிடம் நான் அவ்வளவாகப் பேசியதில்லை. போகும் போது வரும் போது பார்த்து ரேஷன் புன்னகை செய்வதோடு சரி. அவள் தான் எப்போது பார்த்தாலும் காம்பவுண்டு சுவருக்கு அந்தண்டை இருக்கும் இவரோடு வெண்டை தக்காளி, கீழாநெல்லி , கீரை என்று என்னத்தையாவது பேசிக் கொண்டிருப்பாள். எனக்குப் பிடிக்காத இன்னொரு விஷயம்.
 
கண் விழிப்பதை அவரும் பார்த்து விட்டார். மெலிதாகப் புன்னகைத்தார்.” ஹௌ டூ யூ பீல் நௌ?” என்றார். புன்னகைத்தேன். பயப்பட ஒண்ணியும் இல்லை சார். மைல்ட் அட்டாக் தான்.  கரெக்ட் டைமுக்கு இட்டுக்கினு வந்த்தால ஒண்ணும் பிரச்சினையில்லை.
 
ஆனா உங்க ஒய்ப் சொம்மா சொல்லக் கூடாது சார். நீங்க கீழ உயுந்தவொடனே என்னைத் தான் கூப்டாங்க. நான் வந்து பாத்து ஆட்டோ இட்டுகினு வந்ததும் கொஞ்சம் கூட யோசிக்காம உங்கள அப்டியே அலாக்கா கொயந்தைய தூக்கறாப்ல தூக்கிகினு வந்து ஆட்டோல ஏத்தினாங்க பாருங்க. ச்சே..வாட் அ வுமன்!!!. ஆஸ்பத்திரிக்கு வந்து ரெண்டு நாள் சொட்டு ரெஸ்ட் இல்லாம உங்களா பாத்துகினாங்க.
 
இதுக்கு ஊடால, உங்க பையன் வேற ஸ்கூல்ல வெளாடும் போது கீய வுயுந்து அடி பட்டுகினு அது வேற ஒரே ரகளையா போச்சி. அவனையும் இங்கேயே இட்டுகினு வந்து கட்டு போட்டு இப்ப பரவால்ல. வெளில தான் டி வி பாத்துகினு இருக்கான். உங்க ஒய்ப் என்னாண்ட கூட ஒரு ஹெல்ப்புனு கேக்கல. எல்லாத்தையும் அவங்களே பாத்துக்கினாங்க. சும்மா பம்பரமா சுத்தினாங்க சார் இந்த ரெண்டு நாளும்.இன்னிக்கு ஈவினிங் மேல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொல்லிகீறாங்க.
 
இன்னிக்கு தான் காலையில மொத தபா ஹெல்ப் கேட்டாங்க. இன்னிக்கு உங்க டாட்டர ஹாஸ்டல்ல இருந்து இட்டுகினு வர நாளாமே? அதான் “ நான் போய்ட்டு வந்துர்றேன். அது வரைக்கும் நீங்க பாத்துக்கங்க” அப்டினு சொல்லிட்டு போனாங்க” என்று பேசி நிறுத்தியவர், என் முகத்தில் ஓடும் ரியாக்ஷன்களை கணிக்க முடியாமல், அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தவாறு, “ ரொம்ப போரடிச்சிட்டேன் போல. ஜூஸு கீஸு எதுனா குடிக்கிறீங்களா?”  என்றார் நிஜமாகவே அன்பாக.
 
வேண்டாம் என்று புன்னகைத்துத் தலையசைத்தேன். திடீரென்று எனக்கு ஏனோ அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.நான் தானா இது? வெராந்தாவில் இருந்து பேச்சரவம் கேட்டது. அவள் குரல் தான். வந்து விட்டாள் போல. “ நீ என்னத்தையோ படிச்சேன் படிச்சேங்கற. அப்புறம் ஏண்டி உங்க மிஸ்ஸு க்ளாஸ்ல நீ ஒழுங்கா கவனிக்கறதே இல்லைன்னு கம்ப்ளெயின்ட் பண்றாங்க?” என்று பெண்ணை திட்டிக் கொண்டே வந்தாள்.
 
உள்ளே நுழைந்ததும் நான் கண்விழித்திருப்பதைப் பார்த்து லேசாக மிக லேசாக கண்களில் மலர்ச்சி காண்பித்தவள் , “ ஓ!! முழிச்சிட்டீங்களா... இருங்க . ஜூஸ் போடறேன்” என்று வேலையில் பிஸியானாள்.
 
எப்படி இருக்கீங்கப்பா? என்று கேட்ட பெண்ணைப் பார்த்து ஆமோதிப்பாகத் தலையசைத்தேன். அருகில் அவளின் வழக்கமான வியர்வையும் புளிக் கரைசலும் கலந்த வாசனை. அதே எண்ணெய் வழியும் முகம்.மும்மரமாக ஜூஸ் தயாரித்துக் கொண்டிருந்தாள். நெற்றியில் இருந்து வியர்வை சொட்டுவதைக் கூட துடைக்கத் தோன்றாமல்.
 
அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஜூஸை டம்ளரில் நிரப்பி நீட்டினாள் இடது புறங்கையால் நெற்றி வியர்வையைத் துடைத்தவாறே.
 
அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பரிவாகப் புன்னகைத்தேன் எத்தனையோ வருடங்கள் கழித்து. எத்தனை?....
 

தெரியவில்லை.       

Thursday, February 20, 2014

சைக்கிள் சாகஸம்





“டேய் எனக்கு ஒரே ஒரு வாட்டி டா”....

“ வேணாண்டா எங்க அப்பா பார்த்தா அவ்ளோ தான். செமையா அடி விழும்.”

“டேய் டேய் தீபக் ப்ளீஸ் டா... அதோ அந்த ரோடு வரைக்கும் தாண்டா...”

“ பப்பு வெளாடாதடா... நீ இது வரைக்கும் சைக்கிள் ஓட்டியே நான் பார்த்ததில்ல... “

“ டேய் அதெல்லாம் நான் சூப்பரா ஓட்டுவேண்டா... குடுடா... நான் உனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கேன். அன்னிக்கு நீ க்ளாஸ்ல உக்காந்து முறுக்கு சாப்பிடும் போது கூட சுமதி மிஸ் சத்தம் கேட்டு யாருடா அதுன்னு கேட்டாங்கள்ல? நான் சொல்லவே இல்லைல்ல?”

அஸ்திரத்தை வீசியதும் வேறு வழியே இல்லாமல் கொஞ்சம் கையைப் பிசைந்த தீபக், வீட்டுக்குள்ளிருந்து அம்மா பார்க்கிறாளா என்று ஒரு முறை பார்த்துக் கொண்டான். மனசே இல்லாமல் சைக்கிளை பப்புவிடம் கொடுத்தான்.

“டேய்...ரொம்ப தூரம் போகாதடா... சைக்கிள்ல காத்து கம்மியா இருக்கு. அம்மா வேற வந்துடுவாங்க..சீக்கிரம் வந்துடு. ஒரே ரவுண்டு தான்” என்று அவன் கூறியது எங்கோ தொலைவில் கேட்பது போல் இருந்தது பப்புவுக்கு. எட்டியும் எட்டாமலும் இருந்த சீட்டின் மேல் ஏறி உட்கார்ந்து ஹாண்டில் பார் கட கடவென்று ஆட, பயம், உற்சாகம், த்ரில் என சகல உணர்ச்சிகளுடன் சைக்கிளில் விரைந்தான் பப்பு.

முதல் முறை தீபக் வீட்டுக்குப் போன போதே பப்புவுக்கு அந்த வீடு ரொம்பப் பிடித்து விட்டது. அது வரை சினிமாக்களில் மட்டுமே பார்த்துப் பழகி இருந்த ஆள் அமுங்கும் சோபாக்கள், சோகையான பணக்காரத் தனமான லைட்டுகள், மிக உயரமான சீலிங், எல்லாம் பப்புவை வெகுவாகக் கவர்ந்து விட்டது.
 எல்லாவற்றை விடவும் அவனை அப்பட்டமாக ஈர்த்தது, தீபக் வீட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அந்த சைக்கிள். 

அப்போது அஞ்சலி படம் வந்து வெற்றி கரமாக ஓடி முடித்து கொஞ்ச நாள் ஆகியிருந்தது. கேபிள் டி வி புண்ணியத்தில், எல்லா வீட்டிலும் வாரத்துக்கு ஒரு முறை அஞ்சலி படம்.

எத்தனை தடவை போட்டாலும் அம்மாவிடம் திட்டு வாங்கிக் கொண்டே படத்தைப் பார்ப்பான் பப்பு. செய்திகள் வாசிக்கும் போது அந்தப் பெண் கட்டியிருக்கும் புடவையைப் பார்க்கவென்றே நியூஸ் பார்க்கும் பெண்கள் போல், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்ப பப்பு பார்க்க காரணம் அதில் வரும் பொடியன்கள் அணிந்து கொண்டு வரும் வித விதமான டிரஸ், ஷூ, கண்ணாடி அப்புறம் அவர்கள் ஓட்டி வரும் சைக்கிள்களைப் பார்க்கத் தான்.

தீபக் அது வரை தன்னிடம் சைக்கிள் இருப்பதாக ஸ்கூலில் சொன்னதே இல்லை. அஞ்சலி படத்தில் வருவது மாதிரியே சைக்கிள். முதல் முறை அவன் வீட்டில் அந்த சைக்கிள் பார்த்ததுமே பப்புவுக்கு அதை ஒரு தடவையாவது ஓட்டிப் பார்க்க வேண்டுமென்று தீராத ஆசை வந்து விட்டது.

அது மாதிரி சைக்கிள் ஒன்றை வாங்கித் தர சொன்னால் அப்பா புரட்டிப் புரட்டி எடுக்க சாத்தியங்கள் இருந்ததால் பப்புவால் வாய் திறக்க முடியவில்லை.வீட்டில் சைக்கிள் வண்டி என்று யதேச்சையாக பேச்சு வந்தாலே அப்பா டென்ஷனாகிக் கொண்டிருந்தார். காரணம் இல்லாமலா?

அப்போது தான் அப்பா எக்ஸல் சூப்பர் வாங்கி இருந்தார் புதிதாக.ஒரு மாதமிருக்கும்.காலையில் அவர் ஆபீஸுக்கு கிளம்பும் போது பப்பு போய் வண்டி மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு “ எப்பப்பா எனக்கு வண்டி ஓட்ட கத்து குடுக்க போறீங்க?” என்றான். “ முதல்ல நீ வாடகை சைக்கிள்ல குரங்கு பெடல் அடி. அப்புறம் சீட்ல உக்காண்டு ஓட்டு. அதுக்கப்புறம் வண்டியைப் பத்தி யோசிக்கலாம். இப்ப இறங்கு” என்று சொல்லி விட்டுப் போனவர், ராத்திரி வீட்டுக்கு வரும் போது தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சோகமே உருவாய் நடந்து வந்தார். வண்டி தொலைந்து விட்டது.

வண்டி தொலைந்த்தை விட ஆபீஸில் நண்பர்கள் விசாரணை தான் அப்பாவின் டென்ஷனுக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. சொல்லி வைத்தாற் போல் செய்தியைக் கேள்விப்பட்ட பத்து பேர் அவரிடம் வந்து, “ வண்டியைப் பத்தி கடேசியா யார் கிட்ட பேசினீங்க?” என்று கேட்டிருக்கிறார்கள்.

எத்தனை முறை ரீவைண்ட் பண்ணி பார்த்தாலும் பப்பு முகம் தவிர வேறு யாரும் ஞாபகம் வரவில்லை அவருக்கு. அதிலிருந்தே, மற்ற நேரங்களில் சாதுவாக இருப்பவர், சைக்கிள், வண்டி போன்ற வார்த்தைகளைக் கேட்கும் போது மட்டும் கோபாவேசமாகி விடுவார்.

கிட்டாததின் மேல் தானே வெட்டென ஆசை பிறக்கும்? பப்புவுக்கும் அதே தான். அதனால் தீபக்கின் சைக்கிள் மீது ஆசை அதிகமானது. என்ன தான் வாடகை சைக்கிள் வாங்கி ஓட்டினாலும், அஞ்சலி படத்தில் பார்த்த பீல் கிடைக்கவில்லை. ஸோ எப்பாடு பட்டாவது தீபக்கின் சைக்கிளை ஓட்டி விடுவது என்று பப்பு முடிவு பண்ணி விட்டான்.

அவன் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் சின்ன சின்ன பிட்டுகளாகப் போட்டுக் கொண்டிருந்தான் சைக்கிள் ஓட்ட.

நாலாவது முறை போகிற போது தான் முதல் பத்தியில் சொன்ன கான்வர்சேஷன்.எப்படியோ தனக்கு சைக்கிள் ஒழுங்காக இல்லை, சுமாராகக் கூட ஓட்டத் தெரியாது என்பதையும், இந்த மாதிரி சைக்கிளை நேரில் பார்ப்பது வாழ்க்கையிலேயே இது தான் முதல்  முறை என்கிற உண்மையையும் கூறாமல் சைக்கிளை வாங்கி வந்து ஓட்டத் தொடங்கியாயிற்று.

“ இந்த ஹாண்டில் பார் ஏன் இப்படி ஆடிக்கிட்டே இருக்கு?” அதை மேலும் இறுக்கிப் பிடித்தான். ஆட்டம் இன்னும் அதிகமானது. கண்டு கொள்ளாமல் தீபக்கின் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்து, சாலையைக் கடந்து கவர்மென்ட் ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்குள் நுழைந்தான்.

பப்புவுக்கு ஒரே பெருமை. முதல் முறை ( கொஞ்சம் உயரமான ) சைக்கிள் ஓட்டும் போதே ரோடெல்லாம் கிராஸ் பண்ணி விட்டோமென்று. அங்கிருந்த மரங்களை சுற்றி சுற்றி ஓட்டிக் கொண்டிருந்தான். ஹாண்டில் பார் ஆட்டம் அப்படியே இருந்தது. கொஞ்ச நேரம் ஓட்டினவன், திரும்பலாம் என்று மெயின் ரோட்டை நோக்கி ஓட்டினான்.

சாலையின் முனையை நெருங்கும் வரை வலப் பக்கமிருந்து வந்து கொண்டிருந்த லாரியை அவன் பார்க்கவில்லை. சாலையின் விளிம்புக்கு வரும் போது தான் பார்த்தான். ஒரே நொடி. பதற்றத்தில் முக்கியமான விஷயமான பிரேக்கை மறந்து விட்டான் பப்பு. லாரி நெருங்கி விட்டது.அவ்வளவு தான். பப்பு ஹாண்டில் பாரிலிருந்து கையையும் பெடலில் 
இருந்து காலையும் எடுத்து விட்டான்.

அடுத்த நொடி. என்ன நடந்ததென்று தெரியவில்லை. பப்பு லாரியின் அடியில் கிடந்தான்.லாரியின் பின் சக்கரம் அவன் கழுத்துக்கு மிக அருகில் இருந்தது.கொஞ்சம் சுதாரித்த பப்பு, இடப் பக்கம் திரும்பிப் பார்த்தான். சைக்கிள் லாரியின் முன் சக்கரத்தின் அடியில் கிடந்தது. சைக்கிளின் முன் பாதி குப்பலாக நொறுங்கிப் போய் இருந்தது.

லாரி டயர் எங்காவது நகர்ந்து விடப் போகிறது என்றெண்ணி சட்டென்று எழுந்து வெளியில் வந்தான் பப்பு. வலக் கால் கட்டை விரலில் லேசாக சுருக்கென்றது. குனிந்து பார்த்தான். லேசான சிராய்ப்பு. அவன் உடல் மொத்தத்திலும் ஏற்பட்டிருந்தது அந்த ஒரு காயம் தான்.

“அப்பாடி...அடி பெருசா படல. ஆஸ்பத்திரிக்கெல்லாம் போக வேண்டியதில்ல. திட்டு மட்டும் தான் கிடைக்கும். அடிலருந்து தப்பிச்சிடலாம்” மனதுக்குள் எண்ணி சிரித்தபடியே சட்டை டிராயரில் அப்பியிருந்த மண்ணைத் தட்டிக் கொண்டான்.

அதற்குள் கூட்டம் சேர்ந்து விட்டது. ஹாரன் அடிக்காமல் வந்ததற்காக எல்லாரும் லாரிக் காரனை திட்ட ஆரம்பித்து விட்டனர். பப்புவுக்கு அப்போது தான் உறைத்தது. “ ஐயையோ...சைக்கிளை எப்படி குடுக்கப் போறோம்?” மனதுக்குள் பயம் வந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் பக்கத்து வீட்டு டெய்லர் அங்கிள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். பப்புவுக்குக் கொஞ்சம் நிம்மதியானது.பப்புவைப் பார்த்ததும் பதறிய அவர், அருகில் வந்து பார்த்தார்.ஏதாவது காயம் இருக்கிறதா என்று சோதித்தார்.

லாரிக்காரனைப் பார்த்து நாலு சத்தம் போட்டு விட்டு சைக்கிள் யாருடையது என்று கேட்டார்.சொன்னான். அருகில் இருந்த யாரையோ கூப்பிட்டு ஏதோ சொல்லி விட்டு, பப்புவிடம் “ நீ வாப்பா வீட்டுக்கு போகலாம்” என்று சைக்கிளில் முன்னால் உட்கார வைத்துக் கொண்டு வீட்டில் கொண்டு போய் விட்டதோடு அம்மாவிடம் சொல்லியும் விட்டார். அம்மா கன்னா பின்னாவென்று திட்டியதோடு முதுகில் நாலு போடு போட்டாள்.

அம்மா அடித்தால் எப்போதுமே அவ்வளவாக வலிக்காது.. அதனால் பப்பு அதைப் பற்றி அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை. அவன் கவலையெல்லாம் அப்பாவிடம் அடி விழக் கூடாதென்பது தான்.செம்மையா வலிக்கும்.

அடித்ததோடு இல்லாமல், அம்மா அவனை இழுத்துக் கொண்டு தீபக் வீட்டுக்கே சென்றாள். வழியெங்கும் பொட்டு பொட்டென்று அவ்வப்போது முதுகில் போட்டுக்கொண்டே இருந்தாள். தீபக் வீட்டுக்குப் போய் அவன் அம்மாவிடம் பப்புவின் தப்புக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சைக்கிள் உடைந்ததற்கு எவ்வளவு என்று சொன்னால் தந்து விடுவதாகவும் சொன்னாள். 

வேண்டாமென்று மறுத்த அந்த அம்மாள், வீட்டை சுற்றிக் காட்டி காபி போட்டுக் கொடுத்து ரொம்ப நேரம் பெருமை பேசிக் கொண்டிருந்தாள்.

அதற்குள் பப்பு தீபக்கை சமாதானப் படுத்தி விட்டிருந்தான். இருவரும் வழக்கம் போல் தோள் மேல் கை போட்டு பேசிக் கொண்டிருந்தனர் கிளம்பும் வரை.
ராத்திரி அப்பா வீட்டுக்கு வந்ததும் அம்மா வத்தி வைத்து விட்டாள். அடிக்கக் கை ஓங்கிய அப்பாவை, “ போதும் ஏற்கனவே வேண்டிய அளவு குடுத்தாச்சு” என்று தடுத்து விட்டாள். அப்பா அவனை முறைத்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு முறைத்துக் கொண்டே பாட்டு கேட்டு விட்டு முறைத்துக் கொண்டே தூங்கிப் போனார்.

எப்படியோ. அடி வாங்காமல் தப்பியதே போதுமென்றிருந்தது பப்புவுக்கு.

அடுத்த நாள் ஸ்கூலுக்குப் போனதும் இன்னொரு ஏழரை காத்திருந்தது. முதல் பீரியடில் வந்த சுமதி மிஸ் கேஸ் விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் போல் பப்புவைக் கூப்பிட்டு கடுமையாக விசாரித்ததோடு காலை வகுப்புகள் முழுவதும் முட்டி போட வைத்து விட்டார்.

ஸ்கூல் முடியும் போது பப்பு ரொம்ப சோர்ந்து விட்டான். தொங்கிப் போய் வெளியில் வந்தான். அப்போது தான் பக்கத்து க்ளாஸ் சதீஷைப் பார்த்தான். பப்புவின் கண்கள் விரிந்தன. சதீஷ் தன்னுடைய சைக்கிளை ஸ்டாண்டிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தான். அதே அஞ்சலிப் பட சைக்கிள். எதையும் யோசிக்காமல் பப்பு வேகமாக அவனிடம் ஓடினான். மூச்சு வாங்கிக் கொண்டே “ டேய் சதீஷ்...”

திரும்பிப் பார்த்தான். புன்னகை. அவனும் புன்னகை.

பல நாள் பழகிய உயிர்த் தோழன் போல் பப்பு அவனிடம் கேட்டான். “ சதீஷ்...உன் வீடு எங்கடா இருக்கு?”....

Wednesday, February 19, 2014

சதுரகிரி - 2

வியர்த்து விறுவிறுத்து சுந்தர மகாலிங்கத்தின் வாசலை மிதித்து, உள்ளே சில அடிகள் எடுத்து வைத்ததும், " சாமி வாங்க அன்னதானம் சாப்ட்டு போவலாம்" என்று அன்னதான மடத்திலிருந்து வந்த குரல் கையைப் பிடித்து இழுக்காத குறையாய் ஈர்த்தாலும் ( ரொம்ப சிரமப் பட்டு ) மனதை அடக்கிக் கொண்டு, " இல்லீங்கய்யா.. சாமியப் பாத்துட்டு வந்துடறோம்" என்று சொல்லி விட்டு கோவிலை அடைந்தோம்.

இங்கே சுயம்புவான சுந்தர மகாலிங்கம் சற்று சாய்ந்த நிலையில் இருப்பது சிறப்பு. இடையன் ஒருவன் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளில் ஒன்று தினமும் கூட்டத்திலிருந்து விலகிப் போய் ஒரு கல்லுக்கு தன் பாலை சொரிந்ததாகவும், இதை கண்டு கொண்ட இடையன், கோபத்தில் மாட்டை அடித்ததோடு, அந்தக் கல்லையும் அடித்ததாகவும், அதில் அந்தக் கல் வளைந்ததாகவும், பிறகு சிவபெருமான் காட்சி தந்து உண்மை உணர்த்தி கோவில் கொண்டதாகவும் ஒரு வரலாறு வழங்கி வருகிறது.

அடிபட்டதால் உண்டான தழும்பு போன்ற சிறு பிளவு ஒன்று லிங்கத்தின் மேல் இன்றும் உண்டு.

சுவாமியை ஆற அமர தரிசனம் பண்ணி விட்டு திரும்ப வரும் போது அதே குரல். மனதை மீண்டும் அடக்கி விட்டு, " அவரையும் பாத்துட்டு வந்துடறோங்க" என்று சொல்லி விட்டு சந்தன மகாலிங்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்

சுந்தர மகாலிங்கம் நுழைவு வாயில்
படிகளிறங்கி, மீண்டும் எதிர்ப்பக்கம் மேலேறி, சித்தர்கள் தோரணவாயில் தாண்டி, சந்தன மகாலிங்கத்தையும் தரிசித்தோம்.அங்கே அமர்ந்திருந்த ஒரு குழுவிடம் விசாரித்தோம் அடுத்த நாள் மேலே போய் தவசிப்பாறையை பார்க்கும் திட்டத்தை உறுதி செய்ய.
சந்தன மகாலிங்கம் நுழைவுவாயில்

"நாங்களும் சென்னைல இருந்து தான் வரோம்.பெரிய ப்ளானா போட்டுட்டு வந்தோம். இங்க என்னடான்னா மேலயே போகக் கூடாதுங்கறாங்க" என்றார் ஒருவர் கவலையுடன். இதென்னடா சதுரகிரிக்கு வந்த சோதனை என்று பதறி விசாரித்தால், " நிறைய தப்பு நடக்க ஆரம்பிச்சிடுச்சாம் இங்க. எல்லாம் அந்த கடை வெச்சிருக்கறவங்க பண்ணின வேலை. வரவங்களுக்கு என்னத்தையோ சப்ளை பண்ண வேண்டியது. வர்றவங்களும் அதை அடிச்சிட்டு, மேலே போய் இல்லாத கலாட்டாவெல்லாம் பண்ண வேண்டியது. அப்புறம் என்ன ஆவும்.இதான் ஆவும்" என்று முடித்தார்.

சென்ற முறை இருந்த அத்தனை கடைகளும் இந்த முறை காணாமல் போனதன் காரணம் புரிந்தது. நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வனத்துறையர் ஒருவர் சிரித்துக் கொண்டே சொன்னார். மேலே போய்த் தான் ஆவணும்னு அடம் புடிச்சா, தலைக்கு ஐயாயிரம் பைனு. எப்படி தம்பி வசதி?"

மனிதர்களுக்கு இயற்கை எத்தனையோ விஷயங்களை அள்ளித் தருகிறது. ஆனால் பேராசை எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டு தான் ஓய்வேன் என்கிறது. இதனால் பாதிக்கப் படுவது தப்பு செய்பவர்கள் மட்டுமல்ல. இயற்கையை இம்சிக்காமல் அதை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் நம்மைப் போன்றவர்களும் தான்.

மனதை ஒரு மாதிரி தேற்றிக் கொண்டு, திரும்ப அன்ன தான மடத்தை நோக்கி நடையைக் கட்டினோம்.

அங்கே போனதும் முதலில் எங்களை சாப்பிட கூப்பிட்டவரைக் காணோம். இன்னொருத்தர் வந்து ." என்ன சாமி வேணும்?" என்றார்.
"சாப்பாடு இருக்குதுங்களா?"
" இருக்கு சாமி ..கொஞ்ச நேரம் வெயிட் பண்றீங்களா?"
"சரிங்க". திண்ணையில் அமர்ந்தோம்.

அன்னதான மடம்
அதற்குள் இன்னொருத்தர் வந்து உள்ளே அழைத்துக் கொண்டு போனார்.
சும்மா சொல்லக் கூடாது. மலையேறிய களைப்புக்கு, சாப்பாடு சும்மா ஜெட் வேகத்தில் உள்ளே போனது.சாதம், சாம்பார், ரசம், மோர், பொறியல், கடைசியில் பாயசம். அன்ன தானம் போலவே இல்லை. விருந்து தான்.

பெரிய ஏப்பம் ஒன்றை விட்டு விட்டு இரவு தங்க இடம் தேட ஆரம்பித்தோம்.



Tuesday, February 18, 2014

சதுரகிரி - 1

முத்துநகர் எக்ஸ்பிரஸ் பிடித்து நேராக சென்னையிலிருந்து விருதுநகர். காலை விருதுநகரில் இருந்து பஸ் பிடித்து நேராக தாணிப் பாறை. அது தான் சதுரகிரி அடிவாரம். அங்கிருந்து மேலே ஏற மூன்றரை முதல் நான்கு மணி நேரம்

மேலே இராத் தங்கல். காலையில் நேரத்தில் எழுந்து மேலே போய் தவசிப் பாறை, பெரிய மகாலிங்கம், இன்னும் சித்தர் குகைகள் எல்லாம் பார்த்து விட்டு மத்தியானம் கீழே இறங்க வேண்டியது.

அங்கிருந்து நேராக ஸ்ரீவில்லிபுத்தூர். ஆண்டாள் உடனுறை ராஜமன்னாரையும் வடபத்ரசயனரையும் தரிசித்து விட்டு ராத்திரி பொதிகையைப் பிடிக்க வேண்டியது.

இது தான் இனிஷியலாகப் போட்ட ப்ளான். ஆனால் இதில் பாதி தான் நடந்தது கடைசியில்.

"எங்க அப்பா ஏன் வந்து பாக்கலன்னு கேட்டுகிட்டே இருக்காருடா. இப்ப அருப்புக் கோட்டையில தான் இருக்காராம்.அதனால நம்ம பிளான்ல ஒரு சின்ன சேஞ்ச். விருதுநகர் போவாம மதுரையிலேயே இறங்கிருவோம்.

அங்கிருந்து அருப்புக் கோட்டை போயி அப்பாவைப் பாத்துட்டு அப்புறம் சதுரகிரிக்குப் போவோம் டா " என்றான் பார்த்தி.ப்ளானின் முதல் சேஞ்ச்.

முத்துநகர் ஏறி, கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு அம்மா கொடுத்த ரொட்டியை தின்று விட்டு, பக்கத்து சீட்டுகளில் குழந்தைகளோடு இருந்த அம்மாக்களெல்லாம் அவசரப் படுத்தவே, மேலே ஏறி பெர்த்தில் படுத்தாயிற்று.

தூக்கம் வந்தால் தானே? அந்த குட்டியூண்டு இடத்துக்குள் எந்தெந்த ஷேப்பிலெல்லாம் புரள முடியுமோ அத்தனையும் ட்ரை பண்ணி முடித்த பின் ஒரு வழியாக மன சமாதானமாகி கொஞ்சம் தூக்கம் வருகிறாற் போல் இருந்தது. தூங்கலாம் என்று நினைப்பதற்குள் மதுரை வந்து விட்டது. சத்திய சோதனை.

மதுரையில் இறங்கி அருப்புக்கோட்டை போய் அங்கே பார்த்தி வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட். பார்த்தியின் அப்பா அங்கிருந்த இரண்டு கோவில்களுக்குக் கூட்டிப் போனார். ஊரில் அவருக்கு செம மரியாதை.

நான்ங்கள் கோவிலுக்குப் போய் திரும்பி வருவதற்குள் ஒரு பத்துப் பேராவது நின்று " என்னண்ணே... சவுக்கியமா" என்று விசாரித்திருப்பார்கள்.

கோவில் பார்த்து முடித்து பிரேக்பாஸ்ட் முடித்து வீடு வரும் போது அங்கிருந்து சதுரகிரி கிளம்ப ஒரு கார் ஏற்பாடு பண்ணி வைத்திருந்தார்.

கொஞ்சம் கூட உடம்பு நோகாமல் தாணிப் பாறை ( சதுரகிரி அடிவாரம் ) வந்து சேர்ந்தாயிற்று.

வெயில் ஊறும் பாதை
அடிவாரத்தில் இருந்த வினாயகரை வணங்கிக் கொண்டு மெல்ல ஏற ஆரம்பித்தோம்.
போகும் வழியில்

ஆங்காங்கே நின்று நின்று இளைப்பாறி ,வழியில் இருந்த பலாவடிக் கருப்பசாமி, ரெட்டை லிங்கம் எல்லாவற்றையும் வணங்கி, கோரக்கர் குகையை தரிசித்து, வெயிலில் கால்கள் பொரிய


கோரக்கர் குகை
நடை தொடர்ந்து மேலே சுந்தர மகாலிங்கம் கோவிலை அடையும் போது மணி மதியம் மூன்றே முக்கால்.

சுற்றும் முற்றும் பார்த்த பார்த்தி, " என்னடா.. போன முறை நான் வர்றப்போ ஏகப்பட்ட கடை இருந்துச்சு..இப்ப ஒண்ணு கூட காணோமே?" என்று யோசனையாய்க் கூறினான்.

அவன் கேட்ட கேள்விக்கான பதில் தான் எங்களின் இந்த ட்ரிப்பில் ஆகப் பெரிய ஏமாற்றமாக இருக்கப் போகிறதென்று அப்போது தெரியவில்லை.

Saturday, February 15, 2014

நல்ல நாள்

நான் என்ன வெறும் அல்லக் கையா... இவன் மேனேஜர்னா நான் அசிஸ்டன்ட் மேனேஜர். அவ்ளோ தானே வித்தியாசம். பியூன் கிட்ட குடுத்து விடுய்யான்னா அவன் பொறுப்பா இருக்க மாட்டானாம். நம்ப முடியாதாம்.

மீட்டிங்குக்கு பவர் பாயிண்ட் முதக் கொண்டு நானே ப்ரிப்பேர் பண்ணனும். இவர் சும்மா ப்ரசன்ட் பண்ணி பேர் வாங்கிட்டு போயிடுவாரு. வர்ற கோவத்துக்கு....

சரி இந்த மேனேஜர் தான் இப்படின்னு பார்த்தா வந்தவனாவது உருப்படியா? அந்தக் கிழத்துக்கு கீழ வேலை பாக்கறவன்லாம் என் நிலமைல தான் இருப்பான் போல.

கிளம்பற நேரத்துல அந்தக் கிழத்துக்கு அப்படி என்ன அவசரம்? இவ்ளோ முக்கியமான டாகுமென்டுன்னு தெரியுமில்ல. சைன் பண்ண டாகுமென்ட், ஒரிஜினல் கண்டிப்பா தேவை, மெயில்ல அனுப்ப முடியாதுன்னு தெரியுமில்ல..எல்லாம் தெரிஞ்சும் என்ன ..த்துக்கு விட்டுட்டு போனான்.
இப்ப காலங்காத்தால நான் போயி அந்த டாகுமென்டை ஹோட்டல்ல அந்த கிழத்துகிட்ட குடுத்துட்டு வரணுமாம். இதுல அந்த கிழத்தோட பிளைட் பத்தரை மணிக்காம். அதுக்குள்ள குடுக்கணும்னு ஸ்பெஷல் இன்ஸ்ட்ரக்ஷன் வேற. இதுக்கு ஆன் டியூட்டி போட்டுக்கன்னு பெருசா கருணை காட்டறான் அந்த மேனேஜர்.

 இருக்கட்டும். எனக்கும் ஒரு நாள் வரும். அப்ப பாத்துக்கறேண்டா உங்க எல்லாரையும்.

....என்ன ஆச்சு இந்த காருக்கு? இன்னிக்கு பாத்து தான் ஸ்டார்ட் ஆகாம மக்கர் பண்ணும் எழவு. பைக் எடுத்து வேற பல நாள் ஆகுது. சரி பார்ப்போம்....

யோவ்...போயேன்யா...அதான் சிக்னல் போட்டாச்சுல்ல...ச்சே...பைக்ல வந்தா இதே தொல்லை.போச்சு... இதுல தூறல் வேற..

என்ன?...டயர் லேசா ஒழட்டற மாதிரி தெரியுது?....அடங்... நெனச்சேன். எனக்கென்ன வந்துச்சுன்னு பைக்கக் கண்டுக்காம விட்டுட்டு, தேவைப் படும் போது மட்டும் எடுத்தா இப்டி தான் பஞ்சராகி தாலியறுக்கும்..

யேப்பா... கொஞ்சம் அர்ஜென்ட்..சீக்கிரம் பஞ்சர்  போட்டுக் குடு...
அந்த கிழம் ஓட்டல்ல வெயிட் பண்ணிட்டு இருக்கும். போன் போட்டு சொல்லிருவோம்.அடங்கொன்னியா.... என்னடா இது சுக்கிரன் ரவுண்டு போட்டு சுத்துறான்?...அதான பாத்தேன் அந்த மேனேஜருக்கு இவ்ளோ நேரம் ஒரே இடத்துல பொருந்தி உக்கார மாட்டானே... ஒரு கால் கூட வரலையேன்னு பார்த்தேன். போன் ஸ்விட்ச் ஆப் ஆயிருந்தா எப்படி கால் வரும்?

போன் சார்ஜ் இருக்கா இல்லையானு கூட பார்க்காம வந்த பாரு...உன் புத்திய ஜோட்டால தான் அடிக்கணும்.

சரி லேட்டாகுது. ஏப்பா.. பஞ்சர் போட்டு வை. நான் ஆட்டோ புடிச்சு போயிட்டு வந்துர்றேன்.

...யோவ்..என்னய்யா பிராணனை வாங்கறே? நானே காலையிலருந்து கடுப்புல இருக்கேன். ஏன்யா எல்லாம் என்னை மாதிரியே இருக்கீங்க? ஆட்டோ ஓட்டறது தான உன் தொழில்.. அதக் கூட ஒழுங்கா பாத்துக்க முடியாதா... நான் போக வேண்டிய இடம் பக்கம் தான். நடந்தே போய்க்கறேன். போய்த் தொலை.. இந்தா..காசு.

போச்சு. ஆயிரத்து ஐநூறு ரூவா ஷூ போச்சு. பூரா தண்ணி. டேய் கிழவா... எல்லாத்துக்கும் காரணம் நீ தாண்டா...உன்ன.....அய்யய்யோ.. இருந்த டென்ஷன்ல கிழம் சொன்ன ரூம் நம்பர் மறந்து போயிடுச்சே....சரி ஓட்டல்ல போய் விசாரிச்சுப்போம். 

ஹ்ம்ம்..நாம மழையில நனைஞ்சு வெந்து நொந்து நூடுல்ஸாகி வர்றேன். இந்தக் கிழம் கெட்ட கேட்டுக்கு ஸ்டார் ஓட்டல்ல ரூமு...எல்லாம் என் நேரம்.

ஸ்டார் ஓட்டல் ஸ்டார் ஓட்டல் தான். ரிசப்ஷன் பொண்ணே என்னா சூப்பரா இருக்குது. வழியறத கன்ட்ரோல் பண்ணிக்கோ... போய் விசாரி.
விசாரிக்க தானே வர்றேன்? இவ என்ன இப்படி ஏதோ ஜ்ந்துவப் பாக்கற மாதிரி பாக்கறா? அது சரி. ஸ்டார் ஓட்டலுக்குள்ள சேறும் சகதியும் அப்பின ஷூவோட இப்படி பங்கரை மாதிரி வந்தா ஏன் பாக்க மாட்டா?
எக்ஸ்கீயூஸ் மீ...நான் மிஸ்டர் விஸ்வநாதன் அப்டிங்கறவரை பாக்க வந்திருக்கேன். எஸ்.எம். இன்போ டெக். அவர் எந்த ரூம்ல இருக்காருன்னு சொல்ல முடியுமா?

“ He Just Vacated before half an hour Sir….”

Friday, February 14, 2014

சைட்டு

முப்பது வயசாச்சு. ஒரு கல்யாணம் பண்ண வழியக் காணோம். என்ன சைட்டு வேண்டிக் கிடக்கு? தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். மறு கணமே மனதின் மன்மதப் பகுதி வெகுண்டெழுந்து கேள்வி கேட்ட தர்க்கப் பகுதியை அறைந்து சாத்தி விட்டது.
 
மீண்டும் மூச்சு வாங்கியபடியே வியர்த்து விறுவிறுத்தபடி அவளைப் பார்க்க ஆரம்பித்தான்.
 
இப்ப நம் ஹீரோவின் முன் கதை .
 
தினமும் அலுவலகம் விட்டு வரும் போது வண்டியை தவறாமல் ஏதாவது பஜ்ஜி போண்டா கடையில் நிறுத்தி, நன்றாக மொக்கி விட்டு வீட்டுக்குப் போனது, அப்புறம் கம்பெனி மாறி ஊருக்கு வெளியே வேலை கிடைத்ததும், கேன்டீனிலேயே தினமும் சீஸ் சாண்ட்விச்சும் பப்ஸும் சன்னா சமோசாவும் தின்றது, இதெல்லாவறுக்கும் மேல், பாவம் அம்மா மனசு கஷ்டப் படக் கூடாதே என்று, வெளியில் எவ்வளவு தின்றாலும், வீட்டிலும் போய் ஒரு ரவுண்டு கட்டியது, இதெல்லாம் சேர்ந்து, எடையை எக்குத் தப்பாக எகிற வைத்தது அவனுக்கு. மத்தியப் பிரதேசத்தின் எல்லை விரிவடைந்து கொண்டே போனது.
 
விளைவாக, எந்த பிரெண்டைப்  பார்க்கப் போனாலும் மூஞ்சியைப் பார்க்காமல், தோளிலும் கை போடாமல், தொப்பையைப் பார்த்தே பேசத் தொடங்கினார்கள். இதனால் எங்கே போனாலும், குறிப்பாக பெண்கள் இருக்குமிடம் போனால் இந்த சனியன் பிடித்த தொப்பையை பகீரதப் பிரயத்தனம் பண்ணி உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டியிருந்த்து. 
 
வெறுத்துப் போய் , இதை என்னமாவது வழி பண்ண வேண்டும் என்று ரெண்டு வருஷமாக நியூ இயர் தினத்தன்று வீர சபதம் போட்டு, எல்லாரையும் போல் காற்றில் பறக்க விட்டு, ஒரு கட்டத்தில், தொப்பையின் கன பரிமாணங்கள் அபாய அளவைக் கடக்கவே, “முப்பத்தைந்து வயதில் மாரடைப்பு” போன்ற கதைகள் நினைவில் வந்து பயமுறுத்த, அலறிப் பிடித்து ஒரு உயர் ரக ஜிம்மில் போய் சேர்ந்தான்.
 
தான் ஒழுங்காக தொடர்ந்து ஜிம்முக்குப் போவோம் என்ற நம்பிக்கையெல்லாம் அவனுக்கே கிஞ்சித்தும் இல்லாததால், அந்த ஜிம் காரன் கழுத்தைப் பிடிக்காத குறையாக்க் கேட்டும் மூணு மாசம் மட்டும் தான் பணம் கட்டினான்.
 
ஆனால் எந்த தெய்வத்தின் கடைக் கண் பார்வை இவன் மேல் பட்டதோ தெரியவில்லை. திடீரென்று இவனுக்கு நல்ல புத்தி வந்து, எடைக் குறைப்பில் மும்மரமாக இறங்கி, ரெகுலராக ஜிம் போகத் தொடங்கி விட்டான். பலன் நன்றாகவே தெரிந்தது. மூன்று மாதங்களில் ஒரு மாதிரியாக தேற்றி, ஐந்து கிலோ எடை குறைந்து விட்டான்.
 
இந்த முன் கதை எதற்காக இங்கே சொல்லப் படுகிறதென்றால், நம் ஹீரோ இவ்வளவு சுருக்கில் இப்படி எடை குறைக்கக் காரணம் முழு ஈடுபாட்டுடன் கவனம் சிதறாமல் பயிற்சி செய்தது தான் என்பதை நிறுவவே.
 
அந்த கவனத்தையும் கட்டுப் பாட்டையும் கலைக்க வந்தவள் தான் முதல் பத்தியில் நம் ஹீரோ மூச்சிரைக்கப் பார்த்த பெண். வழக்கமாக ஜிம்மில் ஆன்ட்டி என்று இளைஞர்களால் அழைக்கப் படும் தகுதி படைத்த, எடையை எப்படியாவது குறைத்து கணவன்களை ஆச்சர்யப் படுத்த வேண்டும் என்று உழைக்கும் நடுத்தர வயது நாரீமணிகளை மட்டுமே பார்த்துப் பழகியிருந்த இவனுக்கு, அன்று ஜிம்மில் நுழைந்ததும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
 
மிக அழகாக அவள் ட்ரெட் மில்லில் நடந்து கொண்டிருந்தாள். நின்று நிதானமாக அவளை ரசித்தவன், முதலில் அடிப்படை சோதனைகளில் இறங்கினான். முதல் சோதனையாக கழுத்தை பார்த்தான். தாலி இல்லை. மகிழ்ச்சி மீட்டர் ஏறியது. அவள் ஷூவைக் கழட்டும் போது எதார்த்தமாகப் பார்த்தான். அப்பாடா மெட்டியும் இல்லை. கை விரல்களை உற்று உற்றுப் பார்த்தான். தேங்க் காட் !! கல்யாண மோதிரமும் இல்லை. இனிமேல் தாராளமாக இவளை சைட் அடிக்கலாம் என்று குதூகலித்தான்.
 
சைட் அடிப்பதில் கூட நியாய தர்மங்களைப் பின்பற்றுபவன் நம் ஹீரோ என்று சொன்னால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளவா போகிறது? சைட் தொடர்ந்தது. அவள் இவன் காது படவே பெண் ட்ரெயினரிடம் , “ நாளைக்கு நான் வர மாட்டேன். குடும்பத்தோட குருவாயூர் போறோம்” என்று சொன்னதை, இவனுக்கு ஜாடையாக செய்தி சொன்னதாக நினைத்துக் கொண்டு அல்பமாக குதூகலித்தான்.
 
அவள் வண்டி நம்பரை மனப்பாடம் செய்ய முயன்று , அந்த நம்பரில் X வரும் என்பதற்கு மேல் மனப்பாடம் செய்ய முடியாமல் அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டான். அளவெடுத்துச் செய்தது போல் கச்சிதமாக இருக்கிறாளே? இவள் எதற்கு ஜிம்முக்கு வருகிறாள் என்று மனதுக்குள் அதிசயித்தான். என்ன ஒரு குழந்தைத் தனமான முகமும் சிரிப்பும் என்று பூரித்தான். 
 
அந்தப் பெண்ணும் அவ்வப்போது திரும்பி இவனைப் பார்க்க ஆரம்பித்தாள். இவனுக்குப் புல்லரிக்க ஆரம்பித்தது. முன்னை விட ஆர்வமாக ஜிம் திறக்கும் போதே போய் நிற்க ஆரம்பித்தான். அவள் கிளம்பும் வரை செய்த எக்சர்சைஸையே திரும்பத் திரும்ப செய்து கொண்டு திரிந்தான். ட்ரெயினர்களெல்லாம் இவன் ஈடுபாட்டைக் கண்டு வியந்து மகிழ்ந்தார்கள்.
 
அப்போது தான் அந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவம் நடந்தது. ட்ரெட் மில்லில் நடந்து கொண்டிருந்த அவள், இவன் போய் பக்கத்து ட்ரெட்மில்லில் ஏறியவுடன், சட்டெனத் திரும்பி இவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவ்வளவு தான். சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ட்ரெட்மில்லில் இவன் ஓடிய ஓட்டத்தில், ட்ரெயினர்கள் ரெண்டு மூன்று பேர் ஓடி வந்து , “சார் கொஞ்சம் மெதுவா ஓடுங்க. மெஷின் ரொம்ப அதிருது” என்று சொல்ல வேண்டியிருந்தது.
 
உடனே அல்லும் பகலும் இவன் அந்த சிரிப்பு பரிமாற்றத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது எப்படி என்று சிந்திக்கத் தொடங்கினான். அவளிடம் நேர்படப் பேசுவது தான் ஒரே வழி என்று முடிவுக்கு வந்தவனாக, அடுத்த நாள் காலை கிளம்பினான். முன் காலத்தில் பெண்களிடம் பேச முயற்சி செய்து வாங்கிய பல்புகள் துர் சொப்பனங்களாக வந்து பயமுறுத்தினாலும் அவற்றையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு வீறு கொண்டு புறப்பட்டான்.
 
அவளை பார்த்தபடியே ஒர்க் அவுட்டுகளை முடித்தான். அவள் கிளம்பியதும், செய்து கொண்டிருந்த ஒர்க் அவுட்டை பாதியில் போட்டு விட்டு பறக்காவெட்டி மாதிரி அவள் பின்னாலேயே கிளம்பினான்.
 
வண்டி எடுக்குமிடத்தில் அவசரமாகக் கிளம்பியவளை, பதற்றத்துடன், “எக்ஸ்கியூஸ் மீ” என்று சத்தமாகக் கூப்பிட்டு நிறுத்தி விட்டான். திரும்பிப் பார்த்தாள். என்ன பேசுவது என்று தெரியவில்லை. அபத்தமான மௌனத்தை தன் கேனச் சிரிப்பால் நிரப்பினான். அவளும் சிரித்தாள். 
 
சட்டென்று சுதாரித்தவன், “ உங்க பேர் என்னன்னு  தெரிஞ்சிக்கலாமா?” என்றான். “ எதுக்கு?” என்றாள் சிரிப்பை நிறுத்தாமல். “ இல்ல.. தினமும் பாக்கறோம். ஸ்மைல் பண்ணிக்கறோம். பேரைத் தெரிஞ்சு வெச்சுக்கலாமில்லையா? அதான் கேட்டேன்.” என்றவன் தன் பெயரை சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டான்.
 
“ஐயாம் சுசித்ரா” என்றாள் சிரிப்பு குறையாமல். கொஞ்சம் தைரியம் வந்திருந்தது. இருந்தாலும் முதல் நாள் இவ்வளவு போதும் என்று முடிவு செய்தவனாக, “ ஓகே சுசித்ரா..நாளைக்கு பார்ப்போம்” என்றான் புன்னகைத்து.
 
அவளும் புன்னகைத்தவாறே ,” நாளைக்கு நான் வர மாட்டேன். நாளைலேர்ந்து ஒரு டென் டேஸ் வர மாட்டேன்.” என்றாள். சற்றே அதிர்ந்து ஏன் என்பது போல் பார்த்தான்.
 
“ நாளைலேர்ந்து எனக்கு Half Yearly exams ஆரம்பிக்குது. அதனால வர மாட்டேன்” என்று கூறி ஒரு சின்ன இடைவெளி விட்டவள், இவன் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்து, “ ஓகே. நான் கிளம்பறேன். ஸீ யூ லேட்டர் அங்கிள்” என்று புன்னகைத்தவாறு வண்டியை கிளப்பி மறைந்தாள்.
 
“அங்கிள்...அங்கிள்... அங்கிள்...” இவன் காதுகளில் எதிரொலித்த படியே இருந்தது.