Saturday, November 1, 2014

எம் மக்கள்



அந்த மெனு கார்ட் அற்புதமாக அச்சடிக்கப் பட்டிருந்தது. வழு வழு பக்கங்களில் கட்டளைக்குக் காத்திருந்த பதார்த்தங்கள் வெல்வெட் அட்டை கொண்டு மூடப் பட்டிருந்தன. பதார்த்தங்களின் அருகே அதனதன் விலைகள். அவற்றின் பெயர்களின் கீழே சுருக்கமாக அவற்றின் செய் முறை. செய் முறையின் கடினத் தன்மைக்கேற்ப பண்டத்தின் விலையும்.

மெனு கார்டின் கீழ் மேஜை.மேஜைக்கு முட்டுக் கொடுத்து இரு புறமும் நாற்காலிகள். ஒரு புறம் நாற்காலி மேல் அவள் . மறுபுறம் அவன். அவன் பக்கமும் மேஜை மேல் இன்னொரு வழ வழா. "ஆர்டர் பண்ணு ..." என்றாள் . சிரிப்பு நிற்காமல் ஓவர்ப்ளோ ஆகிக் கொண்டே இருந்தது.அவன் தலையை ஆட்டியபடி மெனு கார்டில் ஆழ்ந்திருந்தான். அவன் பார்வை மேயும் இடத்தைக் கண்டவள் முகம் மாறினாள். அவன் பெயர் சொல்லிக் காட்டமாக அழைத்தாள். நிமிர்ந்தான்.

" ஏன் இப்டி பண்ற ...இந்த பழக்கத்தை மாத்தவே மாட்டியா...I ve got promoted. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதைக் கொண்டாட ட்ரீட் கொடுக்கலாம்னு கூட்டிட்டு வந்தா நீ என்னடான்னா ஒவ்வொண்ணா விலையைப் பாத்துக்கிட்டு இருக்க..ச்சே...கல்யாணத்துக்கு முன்னால இருந்த மாதிரி தான் இப்பவும் இருக்க." என்று சலித்துக் கொண்டாள். 

அவள் சூடாவதை உணர்ந்த அவன் சூழ்நிலையை சகஜமாக்க " சாரிடா... நீயே ஆர்டர் பண்ணு...." என்று புன்னகைத்தான். அவன் புன்னகையில் இரங்கியவள் வெயிட்டரை அழைத்தாள்.

அவள் மென்பொருள் நிபுணி . அவன் சி.ஏ . சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து படித்து மேலே வந்தவர்கள். இன்னும் ஓரிரண்டு அப்ரைசல்கள் பார்த்தால் ஆறிலக்கச் சம்பளம் வாங்கக் கூடிய , வெகு சீக்கிரத்தில் செடான் எனப்படும் சொகுசுக் காருக்கு சொந்தக்காரர்கள் ஆக முயற்சி செய்து வரும் ,கனவுகளைத் துரத்தும், அப்பர் மிடில் கிளாஸ் என்னும் உயர் நடுத்தர வர்க்கத்தின் அதிகபட்ச நிலையை நோக்கி நித்தம் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் தம்பதி.

இருவரும் வெகு நிதானமாக ரசித்து ருசித்து டின்னரை முடித்தனர். பில் வந்தது. ஒவ்வொரு பொருளின் விலை. கடைசியில் மொத்தத் தொகை. அதற்கும் கீழ் ஏதேதோ வரிகள். பில்லை ஓரிரு நிமிடங்கள் மேய்ந்தவன் இரண்டு ஆயிர ரூபாய் நோட்டுக்களை எடுத்து பில் அட்டையில் செருகினான். “ப்ச்” என்றாள் சலிப்பாக. நிமிர்ந்து பார்த்தான் என்ன என்பது போல். “ கார்ட் யூஸ் பண்ணுன்னு எவ்ளோ தடவை சொல்லிருக்கேன்” என்றாள். 


அவன் பதில் பேசவில்லை.டேபிளின் மேல் வைக்கப் பட்டிருந்த இனிப்பு சோம்பை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு வெளியே வந்தனர்.ஒன்பதரை மணி. சுற்றுப் புறம் ஓய்ந்திருந்தது. பைக்கை எடுக்கப் போனவர்களின் அருகில் எங்கிருந்தோ வந்தாள் அந்த சிறுமி. அக்கா... பூ வாங்கிக்கோங்கக்கா...முழம் பத்து ரூவா தான்கா..." என்றாள்

."வேண்டாம்மா " என்று தவிர்த்தாள் அவள். "அந்த பெண் முகம் சட்டென்று வடிந்தது. அவனுக்கு அந்தச் சின்னப் பெண்ணைப் பார்க்கப் பாவமாக இருந்தது. "அக்கா மூணு முழம் தான் இருக்குக்கா ... வாங்கிக்கிட்டா வீட்டுக்கு போய்டுவேன்கா ...அண்ணா சொல்லுங்கண்ணா " என்றாள் இருவரையும் பார்த்து. "வாங்கிக்கோயேன்" என்றான் .அந்தச் சிறுமி வைத்திருந்த கூடையைப் பார்த்தாள் அவள். பூ பிரஷ்ஷாகவே இருந்தது. "வாங்கினால் என்ன?"..சரி என்பது போல் தலையை அசைத்தாள்.

பாக்கெட்டிலிருந்து காசை எடுக்கப் போன அவனைத் தடுத்தாள். "மூணு முழமும் சேர்த்து இருபது ரூபான்னு குடு. வாங்கிக்கிறேன் " என்றாள் அந்தச் சின்னப் பெண்ணிடம். சிறுமி  பரிதாபமாக அவனை உதவி கோருவதைப் போல் பார்த்தாள். பயனில்லை என்று தெரிந்ததும் அவளிடம் திரும்பினாள். "அக்கா... முழம் பத்து ரூவாக்கா... இருவது ரூவாக்கு மூணு முழம் கட்டாதுக்கா..." என்றாள் கெஞ்சும் தொனியில். முகத்தை மேலும் இறுக்கிக் கொண்டாள் இவள். "குடுத்தாக் குடு ...இல்லன்னா வேண்டாம்” என்றவள் இவனிடம் திரும்பி. ... வண்டிய எடு..." என்று அவசரப்படுத்தினாள். 

அவன்  கையைப் பிசைந்தான். அந்தச் சிறுமியும். "அக்கா...." என்று ஈனசுரத்தில் மீண்டும் முனகினாள். " அட... வேண்டாம்மா ...நீ ரொம்ப கறாரா விலை சொல்ற. எனக்கு கட்டுபடியாகாது. நீ என்ன பண்ற? ..வண்டியெடுன்னு சொன்னேன்ல.." என்று பொறிந்தாள். சில நொடிகள் என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற சிறுமி  மென்குரலில் " சரிக்கா... குடுங்கக்கா...." என்றாள். இவளிடம் வெற்றிப் பெருமிதம். 

அவன் பாக்கெட்டிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்துத் தந்தான்.அதிலிருந்து இருப்பதிலேயே பழையதாகி அழ்ழுக்கேறியிருந்த இரண்டு பத்து ரூபாய்களாகப் பார்த்து எடுத்து அந்தச் சிறுமியிடம் கொடுத்தாள்.பூவை வாங்கிக் கொண்டாள்.அந்தப் பெண் நோட்டுகளைத் திருப்பித் திருப்பி பார்த்தபடியே கூடையைத் தூக்கிக் கொண்டு நடந்தது.

இவன் வண்டியை ஸ்டார்ட் செய்தான். அவள் ஏறி அமர்ந்தாள். சந்திரமுகி ரஜினி போல் அவள் முகத்தில் எதையோ சாதித்து விட்ட திருப்தி.கிளம்பும் முன் அவன் ஒரு முறை திரும்பிப் பார்த்தான். அந்தச் சிறுமி போய் விட்டிருந்தாள் .

Photo courtesy : Internet

Thursday, September 11, 2014

கோடி



மழை “ ஓ” வெனப் பேரிரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது. கையில் வைத்திருந்த மஞ்சள் பையை இறுக்கிக் கொண்டாள். என்னத்துக்கு இப்படி பேஞ்சு  கெடுக்குது இந்த மழை?” ஓரத்தில் உட்கார்ந்தால் சாரல் அடி அடியென்று அடித்ததால் நடுவில் தள்ளி அமர்ந்தாள். 

நேரம் ரொம்ப ஆகி விட்டதால் பதறிக் கொண்டிருந்தாள்.” பாப்பா வீட்ல தனியாக இருப்பா. மழை வேற இப்படிப் பேயாட்டம் ஊத்துது. இந்தப் புள்ள என்ன பண்ணுதோ?”  மனதைப் பிசைந்து கொண்டிருந்தது. “இப்பத் தான் அந்தா இந்தான்னு கொஞ்சமா பாப்பாவுக்கு சொரம் சரியாயிட்டு வருது. இப்ப பாத்து இப்புடி ஊதக் காத்தா வீசுதே? வெளியில எங்கயாவது வந்து நனைஞ்சு வெக்கப் போறா கிறுக்கு. குச்சுக் குள்ளேயே இருந்தா தேவல.பக்கத்து வீட்டுக்காரி கஞ்சியைக் கொடுத்தாளா தெரிலியே?

இது பைத்தியமாட்டம் கதவைத் தட்டிக் கூடக் கேக்காம உக்கார்ந்திருக்குமே? என்னத்தப் பண்றது.கிடக்கட்டும். நாம போயி எழுப்பி கஞ்சி குடுத்துக்கலாம் “ -தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள்.

இந்த மனுசன் வேற நனைஞ்சுகிட்டே இருப்பாரே? பெண் மேலிருந்து ஞாபகம் புருஷனுக்குத் தாவியது. அடுத்த கணமே வேலைக்குப் போகும் முன் சாக்குப் படுகை மறைப்புக்குப் பின்னால் அவளைப் பிடித்துத் திமிறத் திமிற அவன் கொடுத்த முத்தம் ஞாபகம் வந்து குப்பென வெட்கம் அப்பிக் கொண்டது. செல்லமாகத் தலையிலடித்துக் கொண்டு தனக்குத் தானே சிணுங்கிக் கொண்டாள். 

மகிழ்ச்சியின் தொடர்ச்சியாகப் பிரார்த்தனை. “அந்த ராமநாதன் தான் என் குடும்பத்தக் காப்பாத்தணும்.பாப்பாவுக்கு சீக்கிரம் சுகமாயிரணும்”. அவன் பிரசாதம் பைக்குள் இருந்தது. மெல்லப் பையை விரித்துப் பார்த்தாள். விபூதி வாசனை வந்தது. கொஞ்சம் தெம்பாக இருந்தது.வண்டி மெல்லக் கிளம்பியது. மேலே பார்த்து இரு கைகளையும் கூப்பி வேண்டிக் கொண்டாள். “ ராமநாதா காப்பாத்துப்பா...”

-------------------------------------------------------

தலையைக் குலுக்கிக் கொண்டு நிகழ் உலகத்துக்கு வந்தான். இந்தப் பயணம் தான் தன் வாழ்வின் பாதையைத் தீர்மானிக்கப் போகிறது. கடைசி முயற்சியாக பார்வதியின் அப்பாவிடம் பேச்சு வார்த்தை. இல்லையென்றால் அவர் சம்மதமின்றியே கல்யாணம். இது தான் அவன் முடிவு செய்து வைத்திருக்கிறான். 

பார்வதி தான் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறாள். அவள் அப்பா இவனை அத்தனைப் பேச்சு பேசுவதைப் பார்த்தும் அவள் மனம் சஞ்சலத்திலேயே தான் இருக்கிறது. அந்த மட்டில் இவனுக்குக் கொஞ்சம் வருத்தம் தான். இருந்தாலும் அவ்வளவு சுலபத்தில் அவளை விட்டுக் கொடுத்து விட முடியுமா என்ன?

என்ன ஆனாலும் சரி. முடிந்தவரை அவரை சமாதானப் படுத்த முயற்சி. பார்ப்போம். பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான். வெளியில் அடித்துக் கொண்டிருந்த மழையை வெறித்தான்.

------------------------------------------------------------------------

ஷ்.. கையெடுய்யா... அட எடுய்யான்னா... மிக அடக்கமான குரலில் பேசியபடி வெட்கமும் குறும்பும் கொப்பளிக்க தன் தோள் மேல் படர்ந்த அவன் கையை விலக்குவது போல் விலக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் கையை அவன் எடுத்து விடக் கூடாதே என்று மனதுக்குள் ஆசை.

அவனுக்கா தெரியாது? கண்களில் மின்னும் குறும்பு அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. தைரியமாகச் சீண்டினான். சுற்றிலும் அதிகப் பேர் இல்லாததால் அவர்களைக் கேட்க யாருமில்லை.

வெளியில் பெய்யும் பேய் மழை அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை.அவன் சீண்டலில் மூச்சு வாங்க அவனை லேசாகத் தள்ளி விட்டு விட்டு சற்றே நகர்ந்து அமர்ந்தாள். ஜன்னலுக்கு வெளியே பெய்து கொண்டிருந்த மழையில் அவள் கவனம் பதிந்தது.

மழையின் வேகம் லேசான பயத்தைத் தந்தது. அவள் முகத்தைப் பார்த்தவன் அவளை நெருங்கி அமர்ந்தான். “அவள் முகத்தை நிமிர்த்தியவன், “ என்ன புள்ள பயமா இருக்குதா?” என்று கேட்டுப் புன்னகைத்தான்.” நாந்தான் இருக்கறேன்ல?” என்று கேட்டவாறு அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

இந்த முறை அவன் அணைப்பைத் தடுக்கவில்லை. அவன் தோள் மேல் ஏகாந்தமாகச் சாய்ந்து கொண்டாள். மழை இப்போது பயம் தரவில்லை.
----------------------------------------------------------------
பாதையே சுத்தமாகத் தெரியவில்லை. பழக்கத்தில் மெல்ல செலுத்திக் கொண்டிருந்தார் வண்டியை. லேசான, மிக லேசான பதற்றம் உடலில் பரவிக் கொண்டிருந்தது. இது போன்ற சூழல் அவருக்குப் புதிதல்ல. இருந்தாலும் இந்த முறை என்னவோ. வியர்வை மெல்லக் காதோரம் ஊறிக் கொண்டிருந்தது
.
வெளியில் காற்றோடு சேர்ந்த மழையின் சத்தம் காதைப் பிளப்பது போல் வண்டியின் சத்தத்தையும் மீறிக் கேட்டுக் கொண்டிருந்தது.வீட்டில் மனைவி மருந்து சாப்பிட்டாளா இல்லையா தெரியவில்லை. தான் இல்லாவிட்டால் அலட்சியமாக இருந்து விடுவாள். வழக்கத்தை விட இன்று தாமதம். அதனால் கவலை அதிகமாயிருந்தது.

குழந்தை மாதிரி அவள். கூட இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து சாப்பிடக் கூட நான் சொல்ல வேண்டும். அது சரி. எனக்குக் குழந்தை தானே அவள்?அவளுக்கு நான். வேறு யார்?

நினைவு எங்கெங்கோ அலைந்தாலும் பாதையில் கவனம் இருந்தது. எத்தனை வருஷப் பழக்கம்? நிலையம் நெருங்கி விட்டது தெரிந்தது. என்ன இது? ஒரே இருட்டாக இருக்கிறது? மழை இவ்வளவு பலமாகப் பெய்கிறதே? சிக்னல் வேலை செய்யவில்லை போலிருக்கிறதே? என்ன செய்வது? வண்டியை நிறுத்தி விட்டு சிக்னலுக்காகக் காத்திருந்தார். ஐந்து நிமிடம், பத்து நிமிடம். ம் ஹூம். சந்தடியே இல்லை.

பளிச்சென்று வெட்டிய மின்னலில் ஸ்டேஷன் கட்டிடம் தெரிந்து மறைந்தது. வண்டி நின்றிருந்த இடத்துக்கும் ஸ்டேஷனுக்கும் சில நூறு மீட்டர்கள் தான் இருக்கும்.ஒரு முடிவுக்கு வந்தவராக வண்டியின் ஹாரனை நீளமாக ஒலித்தார்.

ஒரு பெருமூச்சை வெளியிட்டு, வண்டியை மெல்ல நகர்த்தினார். ட்ராக்கின் மேல் கரை தொட்டு ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் மெல்ல நுழைந்தது வண்டி.

நாள் : 22 டிசம்பர் 1964
நேரம் : இரவு சுமார் 12 மணி
----------------------------------------------------------------

பின் குறிப்பு :

On the night of 22 December at 23:55 hours, train no.653, Pamban-Dhanushkodi Passenger, a daily regular service which left Pamban with 110 passengers and 5 railway staff, was only few hundred yards from entering the Dhanushkodi Railway Station when it was hit by a massive tidal wave. A few metres ahead of Dhanushkodi, the signal failed. With pitch darkness around and no indication of the signal being restored, the driver blew a long whistle and decided to take the risk. Minutes later, a huge tidal wave submerged all the six coaches in deep water. The whole train was washed away, killing all 115 on board.

தகவல் உதவி : Wikipedia

Friday, September 5, 2014

தமிழ்ச் சீரியல்களின் சீரிய பண்பாடுகள்






1 . ஆணாக இருந்தால் நிச்சயம் இரண்டு மனைவிகளும் பெண்ணாக இருந்தால் நிச்சயம் இரண்டு கணவர்களும் ( எண்ணிக்கை மாற்றத்துக்குட்பட்டது ) கொண்டிருப்பார்கள்.

2 . வெள்ளிக்கிழமை, அல்லது நல்ல நாள் ஏதாவது என்றால் நிச்சயம் தவறாமல் ஒரு சாவு சீனும் மனதை உருக்கும் பின்னணி இசையுடன் அழுகைக் காட்சியும் உண்டு. டோண்ட் மிஸ் இட் ஐ ஸே...

3 . சீரியலில் நல்லவர்களாக வருகிறவர்கள் எந்தக் காலத்திலும் போடும் சவால்களில் ஜெயிக்கத் துப்பில்லாதவர்களாகவே இருப்பார்கள். வில்லன்கள், வில்லிகளுக்கு மட்டுமே எல்லா சந்தர்ப்பங்களும் சாதகமாக இருக்கும். அப்படி நல்லவர்களுக்கு சாதகமாய் ஏதானும் நடந்தால் சீரியல் முடிவுக்கு வருகிறதெனக் கொள்க

4 . 30 நிமிட ஒளிபரப்பில் 10 நிமிட விளம்பர இடைவேளை போக சீரியல் நேரம் 20 நிமிடங்கள். அதில் நிச்சயம் 15 நிமிடங்கள் “ நாசமாப் போக,உன்னை அழிக்காம விட மாட்டேன், உன்னைக் கொன்னுட்டு தான் மறு வேலை, உருப்படுவியா, என் பாவம் உன்ன சும்மா விடாது “ இவை போன்ற மற்றும் இன்ன பிற தீந்தமிழ்ச் சொற்கள் புழங்கக் கேட்கலாம்.

5 . ஹீரோ வில்லன்களால் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் இடம் ஹீரோயினுக்கு நன்றாகத் தெரிந்த இடமாயிருக்கும். இருந்தாலும் அதைத் தவிர எல்லா இடங்களிலும் உயிரைக் கொடுத்துத் தேடுவார் ( குறைந்தது நாலு எபிசோடுகளுக்கு )

6 . நல்லவர்களாக இருப்பவர்கள் திடீரென்று கெட்டவர்களாக மாறி விடுவார்கள். இதை ஈடு செய்ய கெட்டவர்களாக இருக்கும் யாராவது கண்டிப்பாக நல்லவர்களாக மாறியே தீருவார்கள். டைரக்டருக்கு போர் அடிக்கும் போதெல்லாம் இது நடக்கும்.

7 . வில்லன்களும் வில்லிகளும் எல்லாரும் நடமாடும் இடத்திலேயே நின்று கொண்டு தைரியமாக சதியாலோசனை செய்வார்கள். எல்லா விஷயமும் தெரியும் நல்லவர்களுக்கு இதெல்லாம் மட்டும் காதில் விழவே விழாது. சீரியல் முடிகிற வரைக்கும்.

8 . சதி செய்து கணவன் மனைவியைப் பிரிக்கும் பெண்கள், அவர்கள் ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ளும் போது பக்கத்திலேயே நின்று சீன் முடிகிற வரை சகுனிச் சிரிப்பு சிரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் பாவம் சண்டை போடுகிறவர்களுக்கோ சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் குடும்பத்தாருக்கோ யாருக்குமே இதைப் பார்க்க வாய்க்காது.

9 . ஒரே ஒரு பாட்டு போட்டு வைத்திருப்பார்கள். ஹீரோ ஹீரொயின் ரொமான்ஸ், ஹீரோ காணாமல் போன ஹீரோயினை தேடுவது, ஒரு பாவமும் அறியா கதாநாயகியை போலீஸ் அடிப்பது, வில்லன் ஹீரோவை டார்ச்சர் செய்வது என்று எல்லா சீனுக்கும் அதே பாட்டு தான் பேக் கிரவுண்டில் ஒலிக்கும்.

10 . குழாயடியில் குறுக்கே குடத்தை விட்டவளுடன் சண்டை போடுவது போல் ஆ ஊன்னா அம்மனிடம் போய் சண்டை போடுவார்கள். பாவம் அம்மன். சில சமயம் தற்கொலை மிரட்டலெல்லாம் கூட விடுப்பார்கள்.

11 . இவர்கள் குளிக்க சாப்பிட பாத்ரூம் போகவெல்லாம் எப்போது தான் நேரம் ஒதுக்குவார்கள் என்று காண்போர் வியக்கும் வண்ணம் சில கேரக்டர்கள் எப்போதும் அடுத்தவரைக் கெடுக்க சதியாலோசனையிலேயே இருப்பார்கள்.

12 . ரொம்ப நாளாக நடந்து கொண்டிருக்கும் யுத்தம் முடிவுக்கு வருகிறாற் போல் சட்டென்று ஹீரோ வில்லனையோ அல்லது வில்லன் ஹீரோவையோ சுட்டு விட்டால் அது ஏதோ ஒரு கேரக்டர் காணும் துர்சொப்பனம் எனக் கொள்க.

13 . எந்த சீன் ஆரம்பிக்கும் போதும் யாரேனும் ஒருவர் ஏதோ யோசனையிலிருப்பதும், இன்னொருத்தர் வந்து என்ன யோசிக்கிறீங்க என்று கேட்பதும் சீரியல் சீன்களின் துவக்க மரபு.

14. சீரியல்களின் முக்கால்வாசி இளம் பெண்களுக்கு , பொறுக்கிகள், ஏற்கனவே திருமணமானவர்கள், கள்ளக் கடத்தல் செய்பவர்கள் போன்ற ஆண்கள் மீதே ஈர்ப்பு ஏற்படும்.

15 . எந்தக் குடும்பத்திலும் ஐந்துக்குக் குறையாமல் பிள்ளைகள் இருப்பார்கள். ( அந்த முக்கோணத்தை இவர்களெல்லாம் பார்த்ததே இல்லையா?) ஒரு அண்ணன் நாலு தங்கச்சி, ஒரு அக்கா நாலு தம்பி, இல்லை ஐந்துமே பெண்கள் என பல பெர்முடேஷன் காம்பினேஷன்களில் இந்தக் குடும்பங்கள் காணக் கிடைக்கும் .


16 . முதல் சீரியலில் அடியாளாக நடிப்பவர் அடுத்த சீரியலில் டாக்டர். அந்த சீரியலில் டானாக நடிப்பவர் அடுத்த சீரியலில் சித்தர். அந்த சீரியலில் மந்திரவாதியாக நடிப்பவர் அடுத்த சீரியலில் பிசினஸ் மேக்னட்டு.... இது ஒரு சங்கிலித் தொடர்.


17 . கடைசியாக சீரியல் எடுப்பவர்களுக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டிருப்பவர்கள் டாக்டர்களே. இதை எல்லாம் பார்த்து பி பி எகிறிப் போய் குடும்பத் தலைவிகள் ( சில குடும்பத் தலைவர்கள் கூட ) டாக்டர் வீடுகளுக்குப் படை எடுக்கிறார்கள். டாக்டர்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள்.

இப்போதைக்கு இவ்வளவு போதும்.